செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சென்னையில் பெய்த கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. இதனால், ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப் பட்டது. திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரித்ததால் அடையாறு ஆற்றங்கரையோரம் கோயம் பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை திடீர் நகர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதிகபட் சமாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 11 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், வெளியேறும் உபரிநீரின் அளவு படிப்படியாக விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்த பிறகு, முகாம்களில் இருந்தவர்கள் வீடு திரும்பினர்.
இந்நிலையில், திறக்கப்படும் உபரிநீர் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுவதாகவும், ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை வெளியேற்றினர். விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டதால், அடையாறு ஆற்றில் நேற்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2800 கனஅடியாக இருந்தது.