கடலூர் சிப்காட் மாசுபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
1985-ம் ஆண்டு கடலூரில் அமைக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2014-ம் ஆண்டு அளித்த தகவலில், சிப்காட் வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மிக மோசமாக மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலத்தடி நீரில் குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தது குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கடலூர் மீனவர் புகழேந்தி பசுமைத் தீர்ப்பாயத்தில் 2015-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில், கடலூர் சிப்காட் பகுதியை "கடுமையாக மாசடைந்த பகுதி" என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்த பின்னர், தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், புதிய நிறுவனங்கள் தொடங்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், இனிவரும் காலங்களில் அரசு எந்த ஆய்வையும் மேற்கொள்ள அவசியமில்லை என்றும், புகழேந்தி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறும் சிப்காட் நிறுவனமும், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளின் சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த வழக்கில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், சிப்காட் மற்றும் அதன் தொழிற்சாலைகள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கண்டறியவும், அவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளைக் கண்டறியவும், மாசுபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கவும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியங்களின் மூத்த விஞ்ஞானிகள், திருச்சி என்.ஐ.டி. வேதியியல் துறை வல்லுநர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலிருந்து தொழிற்சாலை மாசு குறித்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழு தனது அறிக்கையை ஆறு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட் தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் உள்ள உயிரிழப்பு எண்ணிக்கை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.