சி.கே.குமரவேல் - கமல்ஹாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்

செய்திப்பிரிவு

எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்காகப் பேசி வருவதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதிமுகவிலிருந்து விலகிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, திமுகவிலிருந்து விலகிய ரவி பச்சமுத்துவின் ஐஜேகேவும் இணைந்து 'மாற்றத்திற்கான கூட்டணி'யை உருவாக்கின. அந்த இரு கட்சிகளும் கமலைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின.

பின்னர், சமீபத்தில் நடைபெற்ற சமக பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் - சமக - ஐஜேகே கூட்டணி உறுதி எனவும், முதல்வர் வேட்பாளர் கமல் எனவும் சரத்குமார் பேசினார். தன்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு நன்றி தெரிவித்த கமல், கூட்டணி குறித்து உறுதியாக ஏதும் கூறவில்லை.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியைக் கூட்டணிக்கு தொடர்ந்து அழைத்து வருகிறது. இது தொடர்பாக, இன்று (மார்ச் 6) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், "தேசியக் கட்சிகள் எங்கள் கூட்டணியில் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாய்ப்பிருக்கிறதா என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

காங்கிரஸ் எங்களுடன் வர வேண்டும் என்பதில் விருப்பம் இருக்கிறது. ஏனென்றால், எங்கள் இரு கட்சிக்கும் ஒரே டிஎன்ஏ. தமிழகத்தில் மிகப்பெரிய மாறுதலை அவர்கள் வந்தால் உருவாக்கலாம். வரவில்லையென்றாலும் நாங்கள் மாறுதல் கொண்டு வருவோம். வந்தால் காங்கிரஸுக்கு நல்லது. அப்படியில்லையென்றாலும் மக்கள் மாறுதலுக்காக எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகிவிட்டார்கள். பேச்சுவார்த்தை வெவ்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. நான் அதை வெளியிட முடியாது" என்றார்.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே வழங்கியதை விமர்சித்துப் பேசிய கமல்ஹாசன், திருமாவளவன் இங்குதான் வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதேபோன்று, காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி., எம்எல்ஏ பதவிகள் கிடைக்கக்கூடாது என திமுக நினைப்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கமல் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT