தமிழகம்

உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் உத்தரவுகளை நிறைவேற்றவும்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள், மேல் முறையீட்டு மனுக்கள் மீது முடிவெடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றிய குமரன் என்பவரை துறை ரீதியான விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்து 2009-ம் ஆண்டு சென்னை காவல்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, குமரன், சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த மேல்முறையீட்டு மனு இதுவரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கொலை முயற்சி தொடர்பான வழக்கில் இருந்து குமரன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத் தீர்ப்பு நகலுடன், 2019-ல் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த இரு மேல்முறையீடுகள் மீதும் எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், தனது மேல்முறையீடுகளைப் பரிசீலிக்க சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி குமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரரின் மேல்முறையீட்டை இரு மாதங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவைப் பிறப்பித்து, மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பல வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, கோரிக்கை மனுக்கள், மேல்முறையீடுகள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவுகள் பிறப்பிக்கப்படாததால், ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல கொடூரக் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர் என நீதிபதி வைத்தியநாதன், தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள், மேல் முறையீடுகள் மீது முடிவெடுக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT