படம்: உதயநிதி பேஸ்புக் பக்கம் 
தமிழகம்

ஸ்டாலின், உதயநிதியிடம் இன்று நேர்காணல்: 10-ம் தேதி வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்

செய்திப்பிரிவு

திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றுடன் முடிவுறும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்கின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. அதனையடுத்து பிப்ரவரி 28-ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன் (06.03.2021) நேர்காணல் முடிவுறுகிறது. கடைசி நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்கின்றனர்.

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர்.
நேர்காணல் இன்றுடன் முடியும் நிலையில், வரும் 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மார்ச் 7-ம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளும் சீட் விவரமும்:

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.

திமுக தேர்தலில் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மேலும், தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளைக் குறிவைக்கிறது.

SCROLL FOR NEXT