‘தினமலர்’ நாளிதழ் முன்னாள்ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி யின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
‘தினமலர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், சங்ககால நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் காலமானார். சென்னை பெசன்ட் நகர் காவேரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.பெஞ்சமின், திமுக எம்.பி. கனிமொழி, மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று, நீதிபதிகள் சுரேஷ்குமார், வைத்தியநாதன், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அசன் மவுலானா, இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தலைவர் அர்ஜுன மூர்த்தி, திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர், தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய பிரமுகர்கள், ஊடகத் துறையினர், பொதுமக்கள், ‘தினமலர்’ ஊழியர்களின் அஞ்சலிக்குப் பிறகு கிருஷ்ணமூர்த்தியின் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காலை 11.10 மணிக்கு வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 11.35 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை முதன்முதலில் பத்திரிகை துறையில் அறிமுகப்படுத்திய கிருஷ்ணமூர்த்தியின் இழப்புஈடுசெய்ய இயலாதது. அவரது படைப்புகளில் அவர் என்றென்றும் வாழ்ந்திருப்பார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியராக மட்டுமல்ல, சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடிப்பதில் நாணயவியல் செயற்பாட்டாளராகவும் இரா.கிருஷ்ணமூர்த்தி பணியாற்றினார். அவரது மறைவு பத்திரிகை மற்றும் நாணயவியல் துறைக்கு பெரும் இழப்பு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு தமிழர் வரலாற்றுத் தளத்துக்கு பேரிழப்பு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார். ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரா.கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், திமுக எம்.பி. கனிமொழி, வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.