மஞ்சளுக்கு ஈரோட்டிலும், மரவள்ளிக் கிழங்குக்கு ராசிபுரத்திலும் வாரியம் அமைக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சு.சுதந்திர ராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு எங்களது சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இதன்படி,அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும், ஆதார விலை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அரசு மானியத்தை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கக் கூடாது. ஏற்கெனவே அமைத்த உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன், கால்நடைக் கடன் மற்றும் பண்ணை சாராக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிட்டு, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மஞ்சளுக்கு ஈரோட்டிலும், மரவள்ளிக் கிழங் குக்கு ராசிபுரத்திலும் வாரியம் அமைக்க வேண்டும்.
இலவச மின்சாரம் தொடர உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் முறையே தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.