‘மக்கள் முன்னேற்றம் காண வேண்டுமெனில் பாஜக, அதிமுக அரசை அகற்ற வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசினார்.
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, கரோனா தொற்று காலத்தில் மக்களின் வாழ்க்கை தரம் பின்னுக்கு தள்ளப்பட்டதுடன், மக்கள் மீது வரி சுமை திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணவில்லை
கரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 50 கோடி மக்கள்வேலை இழப்புக்கு உள்ளாகிஉள்ளனர். மோடியின் சுய சார்பு கொள்கை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்ததாகவே உள்ளது. சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க தொடர்ந்து போராடுவோம். அதை எக்காலத்திலும் தனியார்மயமாக்க அனுமதிக்க முடியாது.
மத்தியில் மோடி அரசையும், மாநிலத்தில் அதிமுக-வையும் வீட்டுக்கு அனுப்பினால், என்ன மாற்றம் ஏற்படும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அரசியல் மாற்றத்தால் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிப்போம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியரூ.8 லட்சம் கோடி கடனை கண்டிப்புடன் திரும்ப வசூலிப்போம். கரோனா தொற்றுக்காக பிரதமரின் பெயரில் வசூலிக்கப்பட்ட நிதிமுழுவதையும் மக்கள் நலப்பணிக்கு செலவிடுவோம்.
எனவே, இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழக மக்கள்முன்னேற்றம் காண பாஜக, அதிமுக அரசை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.