தொண்டை மண்டல மடாதிபதியாக புதிதாக பொறுப்பேற்ற ஸ்ரீலஸ்ரீதிருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகளுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல ஆதீன திருமடம். இந்த மடத்தின் 232-வதுகுருமகா சந்நிதானமாக இருந்து வந்த பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 2-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து 233-வதுகுருமகா சந்நிதானத்தை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 13 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மடாதிபதியை தேர்வு செய்யும் நிகழ்வு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருமட வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஜி.நடராஜன் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், தருமபுரம் ஆதீன மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் தலைமையில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொண்டை மண்டலமடாதிபதியாக பொறுப்பேற்றார்.
பெயர் மாற்றம்
மடாதிபதியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இவர் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து மடத்தில் பூஜைகளை செய்து வருகிறார்.
இவருக்கு நேற்று முறைப்படி பட்டாபிஷேகம் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27-ம் பட்டம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இவரது பட்டாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் மடத்தின் சீடர்கள் பலர் பங்கேற்றனர்.
நித்யானந்தா பக்தர் வெளியேற்றம்
மறைந்த பரமாச்சார்ய சுவாமிகள் கட்டுப்பாட்டில் இந்த மடம் இருந்தபோது, மடத்தில் நித்யானந்தா பக்தர்கள் சிலர் தங்கியிருந்தனர். சுவாமிகள் மறைந்த பிறகு மடத்தின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து நித்யானந்தா பக்தர்களை வெளியேற்றினர்.
தற்போது நடைபெற்ற பட்டாபிஷேகத்துக்கு நித்யானந்தா பக்தர் ஒருவர் வந்திருந்தார். இதைப் பார்த்த மடத்தின் பக்தர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை அங்கிருந்து வெளியேற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சுவாமிகளை பார்த்து ஆசி பெறவே வந்ததாக அவர் தெரிவித்தார். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக போலீஸார் அவரை அனுமதிக்காமல் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மடத் தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.