மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில், திருப்பூர் யூனியன் மில் சாலையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: பாஜக கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை, வேளாண் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றுக்கு தமிழக அரசு ஆதரவளித்துள்ளது.
பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. கடந்த ஓராண்டில் 15 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். விவசாயிகளை இன்னலுக்கு உள்ளாக்கும் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற, மோடி அரசு தயாராக இல்லை. தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளர் விரோதப்போக்கை பாஜக அரசு கையாண்டு வருகிறது.
மக்கள் மீது கொடுமையான தாக்குதல்களை நிகழ்த்தும் மோடி அரசுக்கு உதவும் பழனிசாமி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.