இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வடுகனூர் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் ஆஞ்சநேயலு. 
தமிழகம்

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்ட மக்களிடம் அதிகாரிகள் சமரசம்

செய்திப்பிரிவு

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்ட ஊத்தங்கரை அடுத்த வடுகனூர் கிராம மக்களை அலுவலர்கள் சமாதானம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வடுகனூர். இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பட்டா கேட்டு தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்த கிராம மக்கள், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இத்தகவலை அறிந்த ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர் ஆஞ்சநேயலு, பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி ஆகியோர், கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஏப்ரல் 10-ம் தேதிக்கு மேல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி கூறினர். அப்போது, பட்டா வழங்க உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவினை கிராமமக்கள் கைவிடுவதாக, அதிகாரி களிடம் உறுதியளித்தனர்.

SCROLL FOR NEXT