பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரான ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
இதுதொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தற்போதைய பெட்ரோல், டீசல்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கரோனா பேரிடர் பிரச்சினையால் கடந்த ஓராண்டாக நாட்டின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
அதேபோல், பெட்ரோல், டீசல்விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும்வருமானம் நாட்டின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,விலை உயர்வில் மாநில அரசுகளுக்கும் சமபங்கு இருக்கிறது. ஏனெனில் சம விகிதத்தில்தான் மத்திய, மாநில அரசுகளின் வரிவிகிதம் இருக்கிறது. எனவே, இந்த நிலைமையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி ஏற்றப்படவில்லை
அதேநேரம் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் விலை குறையக்கூடும். மாநில அரசுகளுக்கும் உரிய பங்கீடு கிடைக்கும். ஆனால், அதற்கு சில மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருவதில்லை. மேலும், இத்தகைய சூழல்களைக் கருத்தில்கொண்டே கடந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி உள்ளிட்ட எவ்வித வரிகளும் ஏற்றப்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும்புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. மறுபுறம் திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்கள் நலனுக்கானதல்ல.அவர்களின் வாரிசுகளின் நலன்களை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
தேர்தலைக் கருத்தில்கொண்டு..
இந்த கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது எதையும் செய்யாமல் தற்போது வெற்று அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரியில் ராகுல்காந்தி முகாமிட்டுள்ளார். அவருக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது.
தற்போது தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பணிகள் முறையாக வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகின்றன. இதில் எந்தமுறைகேடும் நடைபெறுவதில்லை. ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை அறிவோம். அவற்றை எல்லாம் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மாநில செய்தித் தொடர்பாளர் சூர்யா, சென்னை மாவட்டத் தலைவர் சைதை சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.