மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில்பங்கேற்க கேரள பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் பொங்காலை மண்டபத்தில் குறைந்த அளவிலான பெண் பக்தர்கள் பொங்காலையிடுகின்றனர். 
தமிழகம்

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் கேரள பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு: கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு களியக்காவிளை சோதனைச் சோவடியில் அனுமதி மறுக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற இக்கோயிலில் மாசிக் கொடைவிழா கடந்த 28- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான வலிய படுக்கை என்னும் மகாபூஜை நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. மண்டைக்காடு கோயில் திருவிழாவின் போது கொல்லம், திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். குறிப்பாக பெண்கள் இருமுடி கட்டி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்காலை மண்டபத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபடு வர்.

வழக்கமாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்காலை இடுவதற்கு கேரளாவில் இருந்து பெண்கள் அதிகம் வருகை புரிவர்.

ஆனால், இந்த ஆண்டு கேரளாவில் கரோனா பரவுவதால் அங்கிருந்து வரும் பக்தர்களுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கேரள பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.

அம்மாநிலத்தைச் சேர்ந்த சில பக்தர்கள் திருநெல்வேலி வழியாக மண்டைக்காடு வருகின்றனர். கூட்டம் குறைவாக இருப்பதால் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய முடிகிறது. ஆனால், போதிய வியாபாரம் இல்லாததால் கோயில் வளாகப் பகுதியில் தற்காலிக கடைகள் குறைந்த அளவில் உள்ளன.

SCROLL FOR NEXT