தமிழகம்

பாலியல் புகார்: டிஜிபி துணைபோன எஸ்.பி இருவரையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன் கடிதம் 

செய்திப்பிரிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக நின்ற எஸ்.பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காவல்துறை தலைவர் டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காவல்துறை தலைவருக்கு இன்று எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:

“அன்புடையீர், வணக்கம்.

பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியையும், அவர் குற்றத்துக்கு துணை போன எஸ்பியையும் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி

அண்மையில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, விஷாகா விசாரணைக் குழு ஒன்றும் சிபிசிஐடியும் இது குறித்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்பதும், குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறையின் மிகுந்த உயர் பொறுப்பில் இருப்பவர் என்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

புகார் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக வெளிவரும் தகவல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கிறது. தமிழகத்தின் ஏழை எளிய பெண்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்குகிறது. இப்பிரச்சனையை தமிழக அரசும், காவல்துறையும் கையாளும் விதத்தை நமது தேசமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பொது மக்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் வலுவான கோபத்தை உருவாக்கியுள்ள இச்சம்பவத்தில் பெண்கள் இயக்கங்கள் இயல்பாகவே நீதி கேட்டு களத்தில் இறங்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் கோவையில் இதற்காக போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 54 பேர் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது.

சிபிசிஐடி விசாரணையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பவர் காவல்துறை படிநிலையில் டிஜிபிக்கு கீழாக இருப்பவர். அவரால் இந்த விசாரணையை நியாயமாக செய்ய முடியுமா என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது.

இச்சூழலில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களது உடனடி நடவடிக்கைக்காக முன்வைக்கிறோம்.

* புகார் கொடுத்துள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

* குற்றம் சாட்டப்பட்ட டிஜிபியையும் அவருக்கு துணை போன எஸ்பியையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்

* உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பணியிட பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவுகள் எதுவுமே முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. பொருத்தமான பிரிவுகளை இணைக்க வேண்டும்.

* 2013 சட்டத்தின்படி காவல் துறையிலும் உள் புகார் குழுவை (Internal Complaints Committee) உடனடியாக அமைத்திட வேண்டும்.

* அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 54 பேர் மீது காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கினை ரத்து செய்ய வேண்டும்.

* இவ்வழக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும்”.

இவ்வாறு அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT