தமிழகம்

தேர்தலையொட்டி திருமண மண்டபம், அச்சகம், நகை அடகுக் கடைகளுக்குக் கடும் கட்டுப்பாடு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாய நலக்கூடங்கள், அச்சகங்கள், கேபிள் டிவி, நகை அடகுக் கடைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் வே.விஷ்ணு பேசியதாவது:

''திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது அதன் விவரத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் தடை செய்யப்பட்டள்ளது. திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம் திருமண பத்திரிக்கை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்று முன்பதிவு செய்ய வேண்டும்.

வரும் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5 மணிக்குமேல் வெளியூர் நபர்கள் தங்க அனுமதிக்கக் கூடாது. வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளைத் திருப்புவற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளைக் கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள், முகவர்களால் மொத்தமாக மீளத்திருப்பப்பட்டு வாக்காளர்களுக்குத் திருப்பி வழங்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மொத்தமாக நகை அடகு நகைகளைத் திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டுப் பிரசுரம் செய்யும்போது கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை அச்சிட வேண்டும்.

அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமானது சட்டத்திற்குப் புறம்பானதாகவோ, அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி ஆகிய விவரங்கள் தொடர்பான எதிர்ப்பு இருந்தாலோ அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிர்ப்பு உடையதாக இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊடகங்களில் அனுமதியின்றி விளம்பரங்கள் ஏதும் ஒளிபரப்பக் கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை, குழுவின் ஒப்புதல் ஏதுமின்றி ஒளிபரப்புதல் கூடாது''.

இவ்வாறு ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT