மருத்துவமனையில் மூதாட்டியிடம் நலம் விசாரிக்கும் தமிழிசை. 
தமிழகம்

மக்கள் பணி செய்யும் மத்திய உள்துறை ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவையில் அறைகள் ஒதுக்கியதில் அரசியலில்லை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் அரிசிக்குப் பதிலாக பணத்தை பயனாளிகள் வங்கி கணக்கில் முழுமையாக தந்துள்ளோம் என, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (மார்ச் 5) அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ், மகேஷ்வரி ஆகியோர், கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:

"முன்பெல்லாம் வெளிநாட்டில் இருந்து தடுப்பூசி வரும். இப்போது நம் நாட்டிலேயே தயாரித்து வந்துள்ள தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் பணியாளர்களும் வந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனையில் செயல்பாட்டை ஆய்வு செய்தேன். எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, ஆய்வக வசதி மேம்பாடு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். சாமானிய மக்களின் நம்பிக்கை அரசு மருத்துவமனைகள்தான். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும்.

புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள கடலூர், விழுப்புரம், ஆந்திரம், கேரளம், தமிழகப்பகுதிகளில் உள்ளோர் கரோனா தடுப்பூசியை புதுச்சேரியில் போட்டுக்கொள்ளலாம்.

நிலுவை ஊதிய பிரச்சினைகள் மனிதாபிமான முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியவுடன் அவர்களை அழைத்து பேசி ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, காரைக்காலில் 9-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் தேர்வுகள் வேண்டுமா என்பது குறித்து அலசி ஆராய்ந்து வருகிறோம். அதன் முடிவுகள் மாலை தெரிவிக்கப்படும்.

ரேஷன் அரிசிக்கான பணம் இதுவரை அனைத்து மாதங்களுக்கும் பயனாளிகளுக்கு தரப்பட்டுள்ளது. அது தொடர்பாக, நிலுவை கோப்பு ஏதும் இல்லை. நிலுவைத்தொகை வரவில்லை என்றால் கோரிக்கை வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாள்தோறும் பொதுமக்கள் கோரிக்கை அனைத்தும் அலசி ஆராயப்படுகிறது. மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், மக்களுக்கான பணியை செய்ய வந்துள்ளதால் சட்டப்பேரவையில் அறைகள் ஒதுக்கப்பட்டது. அதில் அரசியல் இல்லை.

எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எண்ணம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT