ரங்கசாமி ஆதரவு யாருக்கு என்ற குழப்பம் புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்டமாகியுள்ளது. இந்நிலையில், என்.ஆர் காங்கிரஸ் பாஜகவுடன் தான் இருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியும், பாஜக அணியில் அதிமுக, பாமக ஆகியவையும் உள்ளன. இதில், ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு யாருக்கு என்பதில் கேள்வி எழுகிறது.
ரங்கசாமி வழக்கம் போல தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மவுனமாக உள்ளார். பாஜக தரப்பில் மாநிலத்தலைவர் தொடங்கி மேலிடப்பொறுப்பாளர் வரை பலரும் ரங்கசாமியை சந்தித்தும் மவுனம் தொடர்கிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் வெளியிட்ட காணொலியில், "காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கட்சிகளின் அணிக்கு தலைமை வகிக்க ரங்கசாமி முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதில், "என்.ஆர்.காங்கிரஸை பலர் குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளனர். மாநில நலன் கருதி அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். புதுச்சேரியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். அந்த அரசுக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டும்.
இதை எங்கள் தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தபோது நல்ல கருத்து என பாராட்டினார். ரங்கசாமி தலைமையை ஏற்க நாங்கள் தயார். எங்கள் கருத்தை கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்பார்கள். இதுபற்றி, நாராயணசாமியிடம் பேசினேன். அவரும் சாதகமான பதில் தந்துள்ளார். பாஜக வரக்கூடாது என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் இக்கருத்தை ஏற்றுள்ளார். ரங்கசாமி இக்கருத்தை ஏற்க வேண்டும். மாநில நலனை காக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "மக்களைக் குழப்பும் வேலையில் காங்கிரஸ் - திமுக கட்சியினர் புதுச்சேரியில் ஈடுபடுகின்றனர். மக்கள் நலன் கருதி ரங்கசாமி எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பார். இக்கருத்தை திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும்... நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
ரங்கசாமி ஆதரவு ஏதேனும் ஒரு கூட்டணிக்கா, அல்லது தனித்து போட்டியா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்.