வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மதுரையில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு 'சீட்' கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக வி.வி.ராஜன் செல்லப்பா இருந்தபோது துணை மேயராக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா இவரை திடீரென்று மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக்கி வெற்றிப்பெற வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல், மக்களவைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலை அதிமுக சந்தித்துள்ளது.
இதில், வேட்பாளர் தேர்வில் முதல்வர் கே.பனழிசாமி கையே ஓங்கியிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கமான ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை.
அதிமுகவில் சசிகலா அணிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்துடன் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் இருந்த முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்களுக்கு கூட ஓ.பன்னீர்செல்வம் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
சசிகலா - டிடிவி அணிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்தபோது அவருடன் அதிமுகவை விட்டு முதல் எம்பியாக மதுரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கமும் அவருடன் ஓபிஎஸ் பக்கம் சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக அவரை இருவரும் பின் தொடரக்கூடியவர்கள்.
ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் கோபாலகிருஷ்ணனுக்கு ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்களான அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி. ராஜன் செல்லப்பா ஆகிய மும்மூர்த்திகளை மீறி சீட் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
ஆனால், ராஜன் செல்லப்பா மகனுக்கு ‘சீட்’ கொடுத்தது. பெரும் அதிருப்தியடைந்த கோபாலகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வழிகாட்டும் குழுவில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணணை இடம்பெற செய்தார்.
மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘சீட்’ பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்பனு முடிந்தநிலையில் நேர்காணல் நடக்கிறது. இதல், கோபாலகிருஷ்ணன், மதுரை கிழக்கு தொகுதியைப் பெற முயற்சி செய்து வருகிறார். ஆனால், கிழக்கு தொகுதியில் விவி.ராஜன் செல்லப்பா, தனது ஆதரவாளர் வழக்கறிஞர் ரமேஷூக்கு பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார்.
ராஜன் செல்லப்பா, கிழக்கு தொகுதிக்குட்பட்ட புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் அவரை மீறி கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ வழங்க முடியுமா? என்பது தெரியவில்லை.
அந்தளவுக்கு ஓ.பன்னீர்செல்வம், தேனியை மாவட்டத் தாண்டி அதிமுகவில் தனது அதிகாரத்தை செலுத்தமுடியாதநிலையில் அவரது ஆதரவாளர்களே ஆதங்கப்படுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி ஆதிக்கம்தான் இருப்பதால் கோபாலகிருஷ்ணனுக்கு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ‘சீட்’ கிடைப்பது குதிரைகொம்பாக உள்ளது.
இதேபோல், ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ பெற்றுக்கொடுக்க பெரும் சிரமப்பட வேண்டிய உள்ளதாகக் கூறப்படுகிறது.