தமிழகம்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.1 லட்சம்

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே தமிழ் சுவிசேஷ திருச்சபையின் விடுதி உள்ளது. கடந்த 11-ம் தேதி, விடுதிக்குள் நுழைந்த இருவர், 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் செயலாளர் இ.டி.சார்லஸ், சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு திருச்சபையின் சார்பாக தலா ரூ.1 லட்சம் வழங்குகிறோம். அந்த மாணவிகளின் மேற்படிப்பு வரையிலான கல்விச் செலவையும் உணவு, உடை உள்ளிட்ட செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களது பெற்றோர் விரும்பினால், திருச்சபை சார்ந்த நிர்வாகத்தில் வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடுகள் செய்வோம்.

சம்பவம் நடந்த விடுதிக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். விடுதியின் இரவுக் காவலர் யேசுதாஸ் மற்றும் காப்பாளர் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விடுதியில் சேதமடைந்த சுவரை கட்டுவது, முட்புதர்களை நீக்குவது, அதிக காவலாளர்கள் நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சபையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்ய பெண் உள்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT