தமிழகம்

விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும்கள மிறங்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அந்தத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தேர்தல் அலுவலகம் திறந்திருப்பது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விராலிமலை தொகுதியில் நடைபெற்ற 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்றுள்ளார். தற்போது அமைச்சராக உள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை இந்த தொகுதியில் செய்திருப்பதாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

விராலிமலை தொகுதியில், வரும் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் சி.விஜயபாஸ்கர்தான் என இதுவரை அறிவிக்கப்படா விட்டாலும், சுவர் விளம்பரம், வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது என தீவிர வாக்குசேகரிப்பில் விஜயபாஸ்கர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பாஜக சார்பில், விராலிமலை பேருந்து நிலையம் அருகே தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. மேலும், விராலிமலை தொகுதியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரே மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், பாஜகவினர் இந்த தொகுதியில் தனியாக தேர்தல் அலுவலகம் திறந்துள்ளது அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT