திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த சங்கராச்சாரியாருக்கு கோயில் அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, செங்கமலத்தாயார் சந்நிதி, ராஜகோபால சுவாமி சந்நிதி ஆகியவற்றில் வழிபாடு செய்த சங்கராச்சாரியார், ராஜகோபால சுவாமிக்கு சாமரம் வீசி ஆராதனை செய்தார்.
பின்னர், கோயிலில் உள்ள அச்சுதப்ப நாயக்கர் சிலை அருகேகோயில் அர்ச்சகர்கள் விஜயேந்திர ருக்கு கோயில் மரியாதையை அளித்தனர்.
அதன்பின்னர், மன்னார்குடி கீழ முதல் தெருவில் உள்ள மன்னார்குடி பெரியவாள் என்று அழைக்கப்படும் வேத விற்பன்னரான மறைந்த ராஜூ சாஸ்திரிகள் வாழ்ந்த இல்லமான மன்னார்குடி சங்கரமடத்துக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மேல முதல்தெருவில் உள்ள மறைந்த எஸ்டேட் சீனிவாச ஐயங்கார் இல்லமான லட்சுமி பவனத்துக்குச் சென்றார். அங்கு சீனிவாச ஐயங்கார் மகன் காவிரி ரங்கநாதன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அங்கு அவர்களது குடும்பத்தாருக்கு அருளாசி வழங்கினார். அதன்பின்னர், மன்னார்குடி 2-ம் தெருவில் உள்ள னிவாச ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்த நிகழ்வில், டாக்டர் அசோக்குமார், வர்த்தக சங்க மாநில துணைச் செயலாளர் ஞானசேகரன், பேராசிரியர் வெங்கட்ராஜுலு உட்பட ஏராளமானோர் பங்கேற்று அருளாசி பெற்றனர்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்று முதல் முறையாக மன்னார் குடிக்கு வருகை தந்த காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அலங்கார ரதத்தில் அமர வைத்து, செண்டை மேளம், கொம்பு வாத்தியங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம் மற்றும் குதிரைகள் நடனம் என பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, நீடாமங்கலம் அருகிலுள்ள ஆலங்குடி சங்கரஹர மங்கள மாருதி கோயிலில் நடைபெற்ற கிருஷ்ணாநந்த மகா சுவாமிகள் சங்கம நிகழ்ச்சியில் விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள் பங் கேற்றார்.