சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று உற்சவர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை கோலாகலம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. கருட வாகனத்தில் வீதிஉலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நரசிம்மர் பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், கருட சேவை நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் விமரிசையாக நடைபெற்றது. சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு, தெற்கு மாட வீதி உள்ளிட்ட வீதிகளில் நரசிம்மர் வீதி உலா நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வரும் 7-ம் தேதி ஏகாந்த சேவை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5 மணி அளவில் திருத்தேரில் நரசிம்மர் எழுந்தருள உள்ளார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, மார்ச் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.

SCROLL FOR NEXT