நீலகிரி மாவட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலவச வீடு, கோழி ஆகியவற்றை வழங்கிய அரசு அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயில்களான பர்லியார், குஞ்சப்பணை சோதனைச்சாவடிகளில் பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர் .
பாத்திரங்கள் பறிமுதல்:
இந்நிலையில், இன்று (மார்ச் 4) சமவெளி பகுதியில் இருந்து குன்னூருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் ஏற்றி வந்த லாரியை பர்லியார் சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில், ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சம் மதிப்பிலான எவர் சில்வர் பாத்திரங்கள் இருந்தது. எனவே, அதிகாரிகள் பாத்திரங்களை பறிமுதல் செய்து, லாரியை குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர்.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு வாகனம் விடுவிக்கப்படும் என்று, கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இலவச வீடு, கோழி ஆகியவை வழங்குவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அவர் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கக்காச்சி, மேல் பாரத் நகர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பள்ளி ஆகிய பகுதிகளிலும், கோத்தகிரி, மசினகுடி, மாயார், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர், தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆளும் கட்சியினர் கடந்த இரு நாட்களாக வீடு, வீடாக சென்று, ஒரு குடும்பத்துக்கு 25 கோழிக்குஞ்சுகள் வழங்கி வருகின்றனர்.
இது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது. அரசு அதிகாரிகளே வழங்குவது கண்டனத்துக்குரியது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் தற்போது இலவச வீடு, கோழி ஆகியவை வழங்குவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.