ராமநாதபுரம் அருகே முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பதித்த சுமார் 50 ஆயிரம் பள்ளி புத்தகப் பைகளை ஏற்றி வந்த 2 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சித்தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சிதொடர்பான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 கண்டெய்னர் லாரிகள் வந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ராமநாதபுரம் அருகே அச்சுதன்வயல் சோதனைச் சாவடியில் வழிமறித்து நிறுத்தினர்.
சோதனையில் உத்தரப்பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகியமாநிலங்களில் இருந்து வந்த அந்த 2 கன்டெய்னர் லாரிகளில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் சுமார்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இருந்ததை பறக்கும் படையினர்கண்டுபிடித்தனர். 2 கன்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்தபறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.