பங்காரு அடிகளாரின் 81-வது பிறந்த நாள் விழா மேல்மருவத்தூரில் நேற்றும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளை 4 நாட்களாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். 3-ம் நாளான நேற்று முன்தினம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.
நான்காம் நாள் நிகழ்ச்சியை ஒட்டி பங்காரு அடிகளார் மலரால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மூலம் அவரது இல்லத்தில் இருந்து சித்தர் பீடத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் புற்று மண்டபம், சப்தகன்னியர் சந்நிதி, நாக பீடம் உள்ளிட்ட இடங்களில் வலம் வந்தார். கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு கற்பூர தீபாராதனை செய்து பூஜை செய்தார்.
இதைத் தொடர்ந்து அங்குள்ள அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்கார மேடையில் செவ்வாடை பக்தர்கள் முன்னிலையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த விழாவின்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தணிகாசலம், முருகேசன், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அருள்மொழி, செங்கல்பட்டு மூத்த வழக்கறிஞர் கனகராஜ், இசையமைப்பாளர் தேவா, காந்த் தேவா உட்பட பலர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றனர்.
ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் தேவி ரமேஷ், ஆதிபராசக்தி அறநிலையத்தின் அறங்காவலர் உமாதேவி, ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் த.ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். சேலம், நாமக்கல் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.