குழந்தைகளுக்கு காதுகேளாமை ஏற்படுவதைத் தவிர்க்க நெருங்கிய, ரத்த உறவுகளுக்குகள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.
உலக செவித்திறன் நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (மார்ச் 3) நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் டீன் டாக்டர் நிர்மலா பேசியதாவது:
''இந்தியாவைப் பொறுத்தவரை பிறக்கும் 1,000 குழந்தைகளில் 2 பேர் செவித்திறன் குறைந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 6 ஆக உள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பிறவியிலேயே காது கேளாமையோடு பிறந்த குழந்தைகள் மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய, ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்களுக்குப் பிறந்தவையாகும். எனவே, இதுபோன்று திருமணம் செய்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இதுதவிர, கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் சில மருந்துகள், மஞ்சள் காமாலை, பிறப்பின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் போன்றவற்றால் குழந்தைகளுக்குக் காது கேளாமை ஏற்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் பிறவியிலேயே காது கேளாமை உள்ள 6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதுவரை 224 'காக்லியர் இம்ப்ளான்ட்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர், ஓராண்டு செவிவழி பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காதுகள் பராமரிப்பு
காதின் உள்பகுதி தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையது. இயல்பாகவே காதில் உள்ள சுரப்பிகளால் குரும்பி சுரக்கிறது. தூசி, முடி, பிற பொருட்கள் காதுக்குள் செல்லாமல் தடுக்கிறது. எனவே, காது குரும்பியை அகற்ற வேணடிய அவசியமில்லை. காதின் வெளிப்பகுதியை (காது மடல்) மட்டும் சுத்தமான துணியைக் கொண்டு துடைத்துக்கொள்ளலாம். காதை பட்ஸ், இறகு, குச்சி போன்றவற்றைக் கொண்டு குடையக்கூடாது. மீறி பயன்படுத்தினால், குரும்பி உள்ளே சென்று அடைத்துவிடும்.
அதோடு, செவிப்பறை கிழிந்துவிடவும், கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காதில் தண்ணீர் நுழைந்துவிட்டால் அதுவாகவே வெளியில் வந்துவிடும். வரவில்லையெனில் குரும்பி அடைத்துக் கொண்டிருக்கக்கூடும். இதனைச் சரிசெய்ய மருத்துவரை அணுக வேண்டும்''.
இவ்வாறு டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு தலைவர் ஏ.ஆர்.அலி சுல்தான், இணைப் பேராசிரியர் வி. சரவணண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.