சென்னை புறநகர் பகுதிகள் உட்பட பல மாவட்டங்களிலும் மழை, வெள்ள மீட்புப் பணிகளில் இரவு பகலாக பணியாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிவருகின்றனர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் மற்றும் உதவி தலைமை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா மேற்பார்வையில், வடமேற்கு மண்டலத்தில் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, குளோபல் மருத்துவமனை மற்றும் மேடவாக்கம் சாலையின் பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி நகரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தையூர், வேலூர் மாவட்டம் அரக்கோணம், காட்பாடி, நாட்றம் பள்ளி, குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆகிய இடங்களில் அதிகாரிகள், வீரர்கள் என 200 பேர் 17 தீயணைப்பு வாகனங்கள், 6 ரப்பர் படகுகள், மீன்பிடி படகுகள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர் பகுதியில் 1,200 பேரையும், மற்ற இடங்களில் 2,100 பேரையும் மழை வெள்ள ஆபத்துகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 361 கால்நடைகள் காப்பாற்றப்பட் டன.
மீட்பு பணியில் சிறப்பாக செயல் பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.