கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. 
தமிழகம்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அ.முன்னடியான்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

3-ம் கட்டமாக, 60 வயதுக்கு மேல் மற்றும் 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக மூத்த குடிமக்கள், தடுப்பூசி போடும் மையங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை புதுச்சேரியில் மொத்தமாக 11 ஆயிரத்து 461 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், மூத்த குடிமக்கள் 296 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 3) புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் சட்டப்பேரவை அருகில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அவர்களுக்கு 'கோவிஷீல்ட்' என்ற கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்வின்போது, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து முன்னாள் முதல்வரும், எம்.பி-யும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

SCROLL FOR NEXT