திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுகவினர் தேர்தல் அலுவலகத்திற்கு பூமிபூஜை நடத்திவிட்டு இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
திண்டுக்கல், பழநி தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு ஒதுக்க கேட்டு வருகிறது. தொகுதி பங்கீட்டில் இந்த இரண்டு தொகுதிகள் மட்டும் நிலுவையில் இருக்க மற்ற ஐந்து தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு திமுகவினர் திண்டுக்கல் திரும்பிவிட்டனர். இதையடுத்து திமுக போட்டியிட உறுதியான தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் தேர்தல் அலுவலகம் ஜி.ஆர்.,பேட்டையில் திறப்பதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில் திமுக கொறடா அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., நகரசெயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் முதலாவதாக ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட லெக்கையன் கோட்டை ஊராட்சி அரங்கநாதபுரத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார் அர.சக்கரபாணி.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 1996 தேர்தல் முதல் 2001, 2006, 2011, 2016 ஆகிய ஐந்து தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
ஒரு முறை அரசு கொறடாகவும் பதவி வகித்தார். இந்த முறையும் இவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்பதால் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
பிரச்சாரத்தின்போது வேலுச்சாமி எம்.பி., உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.