மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், கமல்தான் முதல்வர் வேப்டாளர் எனவும், சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து விலகி ரவிபச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் 'மாற்றத்திற்கான கூட்டணி'யை அமைத்தனர். இருவரும் இணைந்து, சமீபத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், தூத்துக்குடி புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியதாவது:
"நாம் அரியணையில் ஏறுவதற்கு நேரம் வந்துவிட்டது. ஓரிரு தொகுதிகளில் நிற்க மாட்டோம், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என சொன்னோம். சொல்லி நமக்கு அழைப்பு விடுக்கவில்லையென்றால், அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம்.
நமது வாக்கு விகிதாச்சாரம் என்ன என்பதை தெரிந்துகொள்ளத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எதற்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். துளியும் மரியாதை இல்லாதவர்களாகத்தான் இந்த ஆட்சியாளர்களை பார்க்கிறேன்.
திமுக கூட்டணியிலிருந்து நாம் விலகும்போது, என் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கருணாநிதி கூறினார். பாஜக என்னிடம் பேசியபோது, ஜெயலலிதா அழைத்து திருச்செந்தூரில் போட்டியிட சொன்னார். அங்கு சதித்திட்டத்தால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.
ஒரு தொகுதி கொடுத்து பிரச்சாரத்துக்குப் போக சொன்னால் போய்விடுவோம் என்ற மமதையில் இருந்தனர். தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுகிறோம் என, நிர்வாகிகள் கூறினர். பிப். 20-க்குள் 147 விருப்ப மனுக்களை சமக பெற்றிருக்கிறது.
நல்லவர்களை சேர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தலை சந்திக்க, சமகவும் ரவி பச்சமுத்துவின் ஐஜேகேவும் தேர்தல் ஒப்பந்தம் செய்திருக்கிறது. கமலை நேரில் சந்தித்துக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பழுக்கற்ற கூட்டணி அமைய வேண்டும். இது மூன்றாம் அணி அல்ல, முதல் அணி. வெற்றி பெற விட்டுக்கொடுக்கும் மனம் வேண்டும். திமுக - அதிமுக அற்ற ஆட்சியை உருவாக்க வெற்றி வியூகம் வேண்டும்.
நேற்று (மார்ச் 2) இரவு, 11.55-க்கு, கமல் அலுவலகத்தில் இருந்து பேசினர். 'கொள்கை ரீதியாக நாம் இணைகிறோம்' என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினர். முதல்வர் வேட்பாளர் கமல்தான். விட்டுக்கொடுத்தால் தான் வெற்றி வந்து சேரும். இந்திராகாந்தியையும், லால் பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக்கி அழகு பார்த்தவர் காமராஜர். நான் இரண்டாம் காமராஜராக இருக்கிறேன்.
மநீம, சமக, ஐஜேகவுடன் வெவ்வேறு கட்சிகள் தனித்தனியாக பேசுகின்றன. சிறந்த கூட்டணி உருவாகும். பிறகு நடக்கப்போவதை கமல் சொல்வார். யார், எந்தெந்த பதவியில் இருப்பார்கள் என்பதை கமல் சொல்வார், அதை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். பண அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் காலில் விழுந்து ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் என சொல்ல நான் தயாராக இருக்கிறேன். நீங்களும் சொல்லுங்கள்".
இவ்வாறு சரத்குமார் பேசினார்.