சரத்குமார் கட்டளையிட்டால் தான் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என, ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், ராதிகா பேசியதாவது:
"நான் தான் முதல்வர் என அவரவர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் ஆட்சி அமைக்க வேண்டும் என நினைப்பது சமக மட்டும் தான். தொலைநோக்குப் பார்வையுடன் தான் தலைவர் சரத்குமார் பார்ப்பார். அடுத்த தலைமுறைக்காக நல்லது செய்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். சினிமாவில் பெரிய நடிகராக அவருக்கு இருக்கத் தெரியாதா? உடல்நிலை சரியில்லை என சொல்லி வீட்டுக்குள் இருக்கத் தெரியாதா? எதுவும் வேண்டாம் என ஓடிப்போக போகிறாரா? அவரை எல்லோரும் பெருமையாக பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
காமராஜர் வழியில்தான் நடப்பேன் என உறுதியுடன் இருக்கும் தலைவர் அவர். நினைப்பதை செயல்படுத்திக் காட்டும் ஆற்றல் கொண்டவர் அவர். காமராஜர் வழியை அவர் கண்டிப்பாக எடுப்பார். நான் ஒரு நெடுந்தொடரில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்த தொடர், என்னுடைய நேரத்தை அதிகமாக எடுத்தது. அதனால், 'இப்ப இல்லன்னா எப்ப?' என சொல்லிதான் நான் மக்களுக்காக அதை விட்டு சேவை செய்ய வந்திருக்கிறேன்.
உங்கள் வீட்டு 'சித்தி', 'அரசி', 'வாணி ராணி'யாக என்னை பார்த்திருக்கிறீர்கள். இப்போது, சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறேன். மகளிர் அணி செயலாளர் பொறுப்புடன் இதனை தலைவர் கூடுதலாக கொடுத்திருக்கிறார். அவரின் நம்பிக்கை வீண்போகாது. கட்சியின் வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டு உழைப்பேன்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதுதான் சமத்துவம். வறுமையை ஒழிக்க திட்டம் வைத்துள்ளோம். வீட்டுக்கொரு விவசாயியை உருவாக்க திட்டம், கல்வி, மருத்துவம் இலவசமாக-தரமாக வழங்க திட்டம் வைத்திருக்கிறோம்.
சுற்றிப்பாருங்கள் என்ன நடக்கிறது. ஒரு பிரதான கட்சி, வெளிச்சம் வருகிறது, விடியல் வருகிறது என கூறுகிறார்கள். காலையில் எழுந்து நாம் சூரியனைப் பார்த்து கும்பிடுகிறோம். அவருக்கு மட்டும் இன்னும் விடியவில்லை. இன்னும் இருட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஏனென்றால், இருட்டுக்குள் தள்ளியவர்களே அவர்கள்தானே. ஒரு எண்ணுக்கு 'டயல்' செய்தால் உங்கள் பிரச்சினையை தீர்ப்போம் என்கின்றனர். இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவருடனேயே அவர் மகனும் இருக்கிறார். குடும்ப ஆட்சி. நான் அப்போதே சொன்னேன். அவர்களின் குடும்ப கதை, மெகா தொடர் போன்றது என்றேன்.
இன்னொருபக்கம், மாபெரும் தலைவி இல்லாத கட்சி. 10 ஆண்டுகளாக அந்த கட்சியுடன் எங்கள் தலைவர் இணைந்து செயல்பட்டார். அந்த தலைவியிடம் கொடுத்த வாக்குக்காக பயணித்தார். ஆனால், அங்கிருப்பவர்கள் அப்படி யோசிக்கவில்லை. அவர்கள் வேறு மாதிரி யோசித்தனர். நாம் சொன்னால் கேட்பார்கள் என நினைத்தனர். அந்த தலைவி வேறு, நீங்கள் வேறு. அந்த தலைவி இல்லாமல் தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள். என்ன நடக்கிறதென பார்க்கலாம். மதவாத சக்தியுடன் இணைந்துகொண்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.
சைக்கிளில் சென்று பேப்பர் போட்டு முன்னுக்கு வந்தவர் சரத்குமார். நானும் தனிப்பெண் தான்.எம்.ஆர்.ராதா மகள் என்று என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பிறகு தெரிந்து பயந்துவிட்டார். எனக்கென தனி முத்திரையை பதித்துள்ளேன். சரத்குமாருக்குத் தூண் நான். எனக்கு தூண் அவர்.
கட்சி ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்சியை வலுப்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். தலைவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஆட்சி அமைப்பது கேவலமான செயல். நாம் வெற்றிக்கனியை பறிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தலைவருக்கு பயமே கிடையாது. அவர் அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவார்.
விடமட்டோம். கறிவேப்பிலையா, கொத்தமல்லியா? தலைவர் கட்டளையிட்டால் நான் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன். கோவில்பட்டி, வேளச்சேரியில் நிற்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். ஆனால், கடவுள் என்ன நினைக்கிறார் என்பது தெரியாது. எனக்கு கடவுள் தலைவர்தானே".
இவ்வாறு ராதிகா பேசினார்.