தமிழகம்

எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகள் தோற்கும்; எத்தனை புதிய அணிகள் வந்தாலும் அதிமுகவே வெற்றி அணி: ஜி.கே.வாசன் பேட்டி

செய்திப்பிரிவு

எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகள் தோற்கும் என்றும் தேர்தல் நெருங்க, நெருங்க எத்தனை புதிய அணிகள் வந்தாலும் அதிமுகவே வெற்றி அணியாக இருக்கும் என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே தொகுதியை இறுதி செய்த நிலையில் பாஜக, தேமுதிக இழுபறியில் உள்ளது. பாமகவை விட பாஜக அதிக தொகுதிகளை கேட்பதால் இழுபறி உள்ளது. பாஜக வாங்கிய அதே அளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ள நாங்கள் அதே அளவு தொகுதியை பெறாமல் ஓயமாட்டோம் என தேமுதிக தரப்பில் பிடிவாதம் பிடிக்க இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் நான்காவது முக்கிய கட்சியான தமாகாவுடன் இன்று பேச்சு வார்த்தை தொடங்கியது, தமாகா தரப்பில் நிர்வாகிகள் கோவைத்தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடைய வெற்றிக்காக தமாகா இளைஞரணியினர் களப்பணி ஆற்றுவர். எதிர்க் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு முன், அதிமுகவின் நிஜ வாக்குறுதிகள் நிச்சயம் வெல்லும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு அறிவித்துள்ள அறிவிப்புகளும் தேர்தலில் எதிரொலிக்கும்.

தொகுதிப் பங்கீடு குறித்த தமாகாவின் எண்ணத்தை அதிமுகவிடம் நிச்சயம் பிரதிபலிப்போம். அதற்கேற்றவாறு இலக்கை நிர்ணயிப்போம். கூட்டணிப் பேச்சுவார்த்தை, சுமுகமான முறையில் நடைபெற்று அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஏற்கெனவே ஜனவரி மாதம் தமாகா மண்டலக் கூட்டங்களை நடத்தி, அந்தந்தத் தொகுதிகளில் வெல்லக்கூடிய வேட்பாளர்களின் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மாணவரணி, இளைஞரணித் தலைவர்களுடன் கலந்துபேசி தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளோம்.

எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்தி, சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் நிச்சயம் ஒலிக்கும் நிலையை உறுதியாக ஏற்படுத்துவோம்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க எத்தனை புதிய அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் முதல் அணியாக, வெற்றி அணியாக அதிமுகவே செயல்படுகிறது.

சைக்கிள் சின்னம் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து சட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் கடைசி நாள் வரை முயற்சியை மேற்கொள்வோம்''.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT