சசிகலா மற்றும் தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்கு அறிவர் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே தொகுதியை இறுதி செய்த நிலையில் பாஜக, தேமுதிக இழுபறியில் உள்ளது. பாமகவை விட பாஜக அதிக தொகுதிகளைக் கேட்பதால் இழுபறி உள்ளது. மேலும் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகச் செய்தி வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ''சசிகலா மற்றும் தினகரனின் பலம் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்கு அறிவர். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அவர்கள் இருவரும்தான் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இணைந்து முடிவெடுக்க முடியும், முடிவெடுப்பர்.
நாங்கள் அரசியலுக்காக மட்டும் எதையும் செய்வதில்லை. தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நலன் பாஜகவுக்கு முக்கியம். தமிழ்நாடு கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாக்கிறோம்.
அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் எங்களுக்கு 100 சதவீத பலன் கிடைக்கும். 19-ம் தேதிக்குள் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்படும். தற்போது இதுகுறித்து எதுவும் கூற முடியாது.
நாடு முழுவதும் பாஜகவை வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இரண்டு முறை தமிழகம் வந்துள்ளனர், பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சரும் இங்கு வந்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவரும் தமிழகம் வந்தார். இதன் மூலம் எங்கள் கட்சி பலம் பெறும்.
மாநிலம் முழுவதும் பாஜகவை வலிமை பொருந்தியதாக மாற்றி வருகிறோம். என்டிஏ கூட்டணிக்கு தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் இது நிச்சயம் நடக்கும்'' என்று சி.டி.ரவி தெரிவித்தார்.