தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகின்றன.
ஆளும் கட்சியான அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதால், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 3 வரை மட்டுமே விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க முடியும் என, கால அவகாசத்தைக் குறைத்து அதிமுக அறிவித்தது. ஏற்கெனவே இந்தக் கால அவகாசம் மார்ச் 5 ஆம் தேதி வரை இருந்தது.
இந்நிலையில், அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 3) கடைசி நாள் என்பதாலும், மாலை 5 மணி வரை மட்டுமே விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்திசெய்து அளிக்க முடியும் என்பதாலும், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்ய குவிந்துள்ளனர். அவர்களுடைய ஆதரவாளர்களும் தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
இதனிடையே, தங்களுக்காக விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை (மார்ச் 4), ஒரே நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.