சென்னை அண்ணாசாலையில் நடந்து வந்த மெட்ரோ ரயில் பணிகள் முடங்கியுள்ளதால், தொடர் மழையின்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மெட்ரோ ரயில் பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணி கடந்த 2009 ம் ஆண்டு தொடங்கியது. 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆலந்தூர் கோயம்பேடு இடையே மட்டும் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மே தின பூங்காவில் இருந்து சின்னமலை வரையில் பணிகளை மேற்கொண்டு வந்த கேமின் நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வெளியேற்றப்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு சில உதிரி பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. அதேநேரத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, அண்ணாசாலையின் பெரும்பகுதியில் தடுப்புகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலையில் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் இது அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஎம்எஸ், நந்தனம், சின்னமலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி சாலைகள் தேசமடைந்துள்ளன. இதனால், வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து செல்கின்றன. எனவே, சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை வேண்டு மென்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மே தின பூங்காவில் இருந்து சின்ன மலை வரையில் சுமார் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பணிகளை உரிய காலத்தில் முடிக்காத காரணத்தால், சில மாதங்களுக்கு முன்பு கேமின் நிறுவனம் வெளியேற்றப்பட்டது. புதிய டெண்டரில் மொத்தம் 20 நிறுவனங்கள் பங்கேற்றன. புதிய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிநிலையை எட்டி யுள்ளன. அடுத்த சில வாரங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, சைதாப்பேட்டை மே தின பூங்கா இடையேவுள்ள எஞ்சியுள்ள பணிகளை தொடங்கவுள்ளோம். 2017-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிநிலையை எட்டி யுள்ளன. அடுத்த சில வாரங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, சைதாப்பேட்டை மே தின பூங்கா இடையேவுள்ள எஞ்சியுள்ள பணிகளை தொடங்கவுள்ளோம். 2017-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.