தமிழகம்

2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது: 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவத்தையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 16-ம் தேதி மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. 7-ம் நாள் விழாவில் மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பரணி தீபம்

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்டது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனை செய்யப்பட்டு, பட்டாடைகள் உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்

இதைத்தொடர்ந்து, தங்க கொடி மரம் முன்பு பஞ்சமூர்த்திகள் நேற்று மாலை எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் அமர்ந் தனர். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் “அர்த்த நாரீஸ்வரர்” எழுந்தருளி காட்சி அளித்தார். பின்னர், கொடி மரம் முன்பு இருந்த அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றியதும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. தீபம் ஏற்றியவுடன் கோயில் நடை சாத்தப்பட்டது. தீப தரிசனத்தை காண 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விளக்கில் இருந்து மகா தீபத்தை பருவதராஜகுல சமூகத்தினர் ஏற்றினர். 11 நாட்களுக்கு மகா தீபம் காட்சி கொடுக்கும்.

இதைத் தொடர்ந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு அய்யங் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 29-ம் தேதி தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. தீபத் திருவிழாவையொட்டி ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணித்தனர்.

பவுர்ணமியும், மகா தீபமும் ஒரே நாளில் வந்ததால் நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பக்தர்களை போன்று உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் இன்று கிரிவலம் வருகிறார்.

பிரசாத மை

தீபம் குளிர்ந்த பிறகு, மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை, கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, சிறப்புப் பூஜை நடத்தப்படும். பின்னர், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு ‘பிரசாத மை’ வழங்கப்படும்.

அண்ணா மலையார் கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. | படம்: எம்.மணிநாதன்

SCROLL FOR NEXT