தமிழகம்

பிரதமர் மோடியின் படம், பகவத்கீதை வாசகங்களால் கவனம் ஈர்த்த சதீஷ்தவான் செயற்கைக்கோள்

செய்திப்பிரிவு

சதீஷ்தவான் செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் படம், பகவத்கீதை வாசகம் இடம்பெற்றது தேசியஅளவில் கவனம் பெற்றுள்ளது.

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில், விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணிகளை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த நிறுவனம் தயாரித்த‘சதீஷ்தவான் சாட்’, பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் கடந்த பிப்.28-ம் தேதி வெற்றிகரமாகவிண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம் பெற்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறும்போது,

‘‘சதீஷ்தவான் சாட் 1.9 கிலோ எடைகொண்டது. இதை கல்லூரி மாணவர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழு தயாரித்தது. மறைந்த விஞ்ஞானி சதீஷ்தவானை நினைவுகூரும் விதமாக செயற்கைக்கோளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

அதேபோல், விண்வெளி ஆய்வில் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதற்கு நன்றி செலுத்தும்விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் செயற்கைக்கோளில் பொறிக்கப்பட்டது. அதனுடன் விண்வெளி அறிவியல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25,000 இந்தியர்களின் பெயர்கள் டிஜிட்டல் வடிவில் சேர்க்கப்பட்டன. மேலும், பகவத்கீதை வாசகங்கள் ‘மெமரி கார்டு’ மூலம் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலவும் வானிலை, காந்தப் புலங்கள், கதிர்வீச்சு, இயந்திரங்கள் இடையேயான தகவல் தொடர்பை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்’’ என்றார்.

SCROLL FOR NEXT