கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட் டத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்ட அமைச்சர் குழு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கனமழைக்கு கடலூர் மாவட்டம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 1 லட்சம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.
இதையடுத்து நிவாரணப் பணிகளுக்காக ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரவாரியம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல் வேறு துறை உயர் அலு வலர்கள் கடலூர் மாவட்டத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணம் வழங்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான தற்காலிக முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்படி, கிராமப் பகுதியில் 42 ஆயிரம் பேரும், நகரப் பகுதியில் 4 ஆயிரம் பேரும் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி தரப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 683 ஊராட் சிகளில் 585 ஊராட்சிகளில் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை மூலம் 23 மின்மாற்றிகள் புதிதாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. 1,513 புதிய மின் கம்பங்களும் நிறுவப்பட்டுள்ளன. 220 ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை மூலம் 40 குழுக்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 121 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 143 கால்நடை களுக்கு தடுப்பூசியும், 3 ஆயிரத்து 135 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25 டன் கால்நடை தீவனம் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் பலப்படுத்தும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுப்பணித் துறை மூலம் 25 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கண்மாய்கள், மதகுகள், கரைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது.
வேளாண்மைத் துறையின் மூலம் பயிர் சேதங்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மீன் வளர்ச்சித்துறை மூலம் 49 மீனவ கிராமங்களில் சேதமடைந்த படகுகள், வலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத் திலிங்கம், சம்பத், ஜெயபால், உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.