தமிழகம்

பாதுகாப்பு விதிமுறைகளில் அலட்சியம்: பிரச்சாரம், கூட்டங்களால் கரோனா அதிகரிக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர்கள் அச்சம்; கண்காணிப்பு குழு அமைக்க வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தும், உயிரிழப்பு 30-க்கும் அதிகமாகவும் பதிவானது. ஊரடங்கு மற்றும்தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல், சுவாசப்பிரச்சினை போன்ற கரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும்பொதுக் கூட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதன் காரணமாக, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்டமாநிலங்கள் போல, தமிழகத்திலும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக கேட்டபோது,சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சமூக இடைவெளி,முகக் கவசம் அணிவது ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

எனவே, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக்கும் வகையில் கரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.

அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். தேர்தல்ஆணையம் முறையான அறிவுறுத்தலை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT