ஊத்துக்குளியில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் நேற்றுகைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி - கூலிபாளையம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் முகப்பு பகுதியில் ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தை, கடந்த 28-ம் தேதிகயிற்றால் கட்டி கார் உதவியுடன்மர்ம நபர்கள் வெளியே இழுத்துச்சென்று காரில் இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் 7 தனிப்படை அமைத்துவிசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் இவ்வழக்கில் தொடர்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் ஈச்சர் லாரியை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த வாகனத்தில் இருந்த ராகுல் (24), ரஃபீக்(24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம் கான்(45) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பூர், ஈரோடு பகுதிக்கு சரக்கு வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்ல வந்து செல்வது வழக்கம். இந்த முறை ஈரோட்டுக்கு பருத்தி நூல் ஏற்றிச் செல்ல வந்துள்ளனர்.
அப்போது, ஆள் அரவமற்ற பகுதியில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது, அந்த மாநிலத்தில் சிறு,சிறு குற்ற வழக்குகள் உள்ளன.பெருந்துறை ஈங்கூர் நல்லிக்கவுண்டம்பாளையம் பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வாகனத்தை திருடிச் சென்று கொள்ளையில் ஈடுபட்டதும், ஏடிஎம்இயந்திரத்தை கன்டெய்னர் ஈச்சர்லாரிக்கு மாற்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
கன்டெய்னர் வாகனம், கடத்தப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த ரூ.69120, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள், வெல்டிங் இயந்திரம், கியாஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கியாஸ் கட்டர், ராடு, ஸ்க்ரு ட்ரைவர், கட்டிங் பிளேடு, கயிறு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன” என்றனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் ஊத்துக்குளி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவர்முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.