கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள நேரு நகரில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஜெயலலிதா, முதல்வர்கே.பழனிசாமி ஆகியோரது படம் பொறித்தகவரில், வேஷ்டி,சேலை, சில்வர்தட்டுகள், ஹாட் பாக்ஸ் போன்றவை பதுக்கி வைத்துள்ளதாக அப்பகுதி திமுகவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீஸார், அங்கு சென்று விசாரித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற் கிடையே, திமுகவினர் அளித்த தகவலின் பேரில், சம்பவஇடத்துக்கு தேர்தல்பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.
வாக்காளர்களுக்கு அதிமுக வினர் பரிசுப் பொருட்களை கொடுக்க முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும்உரிய நடவடிக்கை எடுக்காத பீளமேடு காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமெனவும், பரிசுப் பொருட்களுடன் பிடிபட்ட காரை பறிமுதல்செய்ய வேண்டுமென்றும் திமுகவினர் வலியுறுத்தினர்.
இந்த பிரச்சினை தொடர்பாக, திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையிலான திமுகவினர் நேற்று ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரணிடம் புகார் மனு அளித்தனர்.