தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் தேர்வில் இளைஞர்களுக்கு 50% வாய்ப்பளிக்க முடிவு: முதல்முறை வாக்காளர்களை கவர ஸ்டாலின் திட்டம்

எம்.சரவணன்

முதல் தலைமுறை வாக்காளர் களைக் கவரும் வகையில் திமுக வேட்பாளர்களில் 50 சதவீதம் இளை ஞர்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி யின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. ஆனால், கடந்த மார்ச் மாதமே தேர்தல் பணிகளை திமுக தொடங்கியது. பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்குமாறு கடந்த மார்ச் 11-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2-ம் தேதி வரை ரூ.21 கோடியே 77 லட்சத்து 4 ஆயிரத்து 630 தேர்தல் நிதி வசூலாகியுள்ளது.

கடந்த ஜூலை 24-ம் தேதி 17 பேர் கொண்ட வாக்குச் சாவடி முகவர் கண்காணிப்புக் குழுவும், 27-ம் தேதி டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப் புக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு 32 மாவட்டங்களிலும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 32 மாவட்டங்களுக்கும் கடந்த அக்டோபர் 22-ம் தேதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டனர்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க திமுகவின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் மக்களைச் சந்தித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 3-வது கட்ட பயணத்தை திருவள்ளூரில் நேற்று நிறைவு செய்தார். இறுதிகட்டமாக நவம்பர் 17 முதல் 20 வரை சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இந்தப் பயணம் முடிந்ததும் வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் கவனம் செலுத்த இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நமக்கு நாமே பயணம் முடிந்ததும் வேட்பாளர் தேர்வு குறித்து மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் முதல்முறை வாக்காளர்களான 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களின் வாக்குகளே பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அதுபோல வரும் பேரவைத் தேர்தலில் முதல்முறை வாக்காளர் களை கவரும் வகையில் வேட்பாளர் களில் 40 வயது வரை உள்ள இளை ஞர்களுக்கு 50 சதவீதம் வாய்ப் பளிக்க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்தந்த தொகுதியில் செல்வாக்கு படைத்தவர்கள், எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகா தவர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

திமுக தனித்தே ஆட்சி

ஆட்சியில் பங்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக கூறிவருகின்றன. இந்நிலையில் ‘தி இந்து’வுக்கு (ஆங்கிலம்) பேட்டி அளித்த ஸ்டாலின், ‘‘தமிழக மக்கள், கூட்டணி ஆட்சியை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. 1980 பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் சரிசமமாக தொகுதிகளை பங்கிட்டு போட்டியிட்டன. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT