கிருஷ்ணகிரி அடுத்த ஏக்கல்நத்தம் கிராமத்துக்கு மலைப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை வழியே நடந்து செல்லும் மூதாட்டி. படம்: எஸ்.கே.ரமேஷ் 
தமிழகம்

50 ஆண்டுகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றம்: மனநிறைவுடன் வாக்களிக்க காத்திருக்கும் ஏக்கல்நத்தம் மலைக் கிராம மக்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்களின் 50 ஆண்டு கால சாலை வசதி கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் சட்டப்பேரவை தேர்தலில் மனநிறைவுடன் வாக்களிக்க உள்ள தாக ஏக்கல்நத்தம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் ஏக்கல்நத்தம். தரைமட்டத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மலை மீது அமைந்துள்ள இக்கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 700-க்கும் அதிகமான வாக்காளர் கள் உள்ளனர்.

விவசாயத்தை வாழ்வாதார மாகக் கொண்ட இப்பகுதி மக்கள் சாலை வசதி இல்லாததால் நடந்தே கீழே உள்ள மகாராஜகடை பகுதிக்கு வந்து அங்கிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர வாய்ப்பில்லாத நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை கட்டில் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி யிருந்தது.

ஏக்கல்நத்தத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இக்கிராம மக்கள் சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தல்களை புறக்கணித்து வந்தனர். குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் இக்கிராம மக்கள் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், ஏக்கல்நத்தம் மலைக் கிராமத்திற்கு ரூ.2.50 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சி நிதியில் இருந்து தார் சாலை அமைக்கும் பணி தொடக்கப் பட்டது. இச்சாலையில் 254 மீட்டர் தூரத்துக்கு சிமென்ட் தடுப்பு சுவர், 2 இடங்களில் மழை நீர் செல்லும் பாதையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது தார் சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏக்கல்நத்தம் மக்கள் கூறும்போது, ‘‘சாலை வசதி இல்லாததால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தோம். தற்போது சாலை அமைத்து கொடுக்கப்பட்டதன் மூலம் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர் பகுதிக்கு எளிதாகச் சென்று வர முடிகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் மனநிறைவுடன் வாக்களிக்க உள்ளோம்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT