தமிழகம்

சட்டவிரோத செயல், விதிமீறல் நடக்கிறதா?- சென்னையில் ராட்சத திரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு: காவல் ஆணையர் அலுவலகத்தில் தனிப்படை

செய்திப்பிரிவு

சென்னையில் சட்டவிரோத செயல்கள், போக்குவரத்து விதிமீறல், வாகன நெரிசல் என கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள ராட்சத திரையில் தனிப்படை போலீஸார் தினமும் கண்காணிக்கின்றனர்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்ற செயல்களையும் தடுக்க போலீஸார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குற்ற செயல்களை தடுக்கவும், நடந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் சென்னை முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

இந்த நிலையில், சென்னை போலீஸாரின் தலைமையகமான காவல் ஆணையர் அலுவலகத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. காவல் ஆணையர், கூடுதல், இணை, துணை ஆணையர்கள், மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, போக்குவரத்து காவல் உட்பட பல்வேறு பிரிவுகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படுவதால் அத்துமீறி யாரேனும் உள்ளே புகுந்து அசம்பாவித செயல்களில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதால் அங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலக கட்டிட வளாகத்தின் உள்ளேயும், வெளியிலும் 40 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் பதிவாகும் காட்சிகளை காவல் ஆணையர் அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள ராட்சத திரையில் தெளிவாக பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை கண்காணிக்க உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் இந்த ராட்சத திரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால், எந்தெந்த பகுதிகளில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகின்றன, சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவாறும் போலீஸார் கண்காணிக்கின்றனர். அவ்வாறு நடப்பது தெரியவந்தால், உடனே சம்பந்தப்பட்ட காவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க முடிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக கட்டிட வளாகத்தின் உள்ளேயும், வெளியிலும் 40 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.

SCROLL FOR NEXT