திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. (உள்படம்) இந்நிகழ்வில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நரசிம்ம பெருமாள். படங்கள்: பு.க.பிரவீன் 
தமிழகம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திருவிழாக்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட பிரம்மோற்சவ விழா தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பார்த்தசாரதி சுவாமிக்கு கடந்த மாதம் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, நரசிம்மருக்கு பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பெரிய வீதி புறப்பாடு, பக்தி உலாத்தல், மண்டப திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர். நாளை அதிகாலை 5.30 மணிக்கு கருடசேவை, மார்ச் 7-ம் தேதி ஏகாந்த சேவை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணியளவில் நரசிம்மர் திருத்தேரில் எழுந்தருள உள்ளார். மார்ச் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.

SCROLL FOR NEXT