5 ஆண்டுகளாக ஆட்சியில் பிரச்சினையால் கட்சி நிர்வாகிகளை வளர்த்துவிட முடியவில்லை என அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகனும், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளருமான கருணாகரன் ஆதங்கப்பட்டார்.
சிவகங்கையில் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒன்றியக் கவுன்சிலராக இருந்தவரை (பாஸ்கரனை) எம்எல்ஏவாக்கி, அமைச்சராக்கிய பெருமை உங்களைத் தான் சேரும். எங்களது ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டோம். இந்த இயக்கம் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் நாங்கள் பாடுபடத் தயார். நாம் தான் மீண்டும் ஆட்சிக்குவருவோம்.
5 ஆண்டுகளாக சுமூகமாக ஆட்சியைக் கொண்டு செல்வதி லேயே சிரமம் இருந்தது. அதனால் நாங்களும் கட்சி நிர்வாகிகளிடம் நல்லது, கெட்டதைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
உங்களை நல்ல நிலைக்கு வளர்த்துவிட முடியவில்லை என்ற ஆதங்கம் எங்களுக்கு இருக்கிறது. கடைசி ஓராண்டில் நன்றாக இருக்கும் என்று பார்த்தால், கரோனா வந்துவிட்டது. அதி லேயே காலம் கடந்து விட்டது. எங்கள் மீது குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். தேர்தல் போர்க்களம் மாதிரி, இதில் ஒப்பாரி வைக்க முடியாது. போராடித்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.