கழுகுமலை பேரூராட்சி பகுதியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பிரச்சாரத்தை தொடங்கினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
காலையில் கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, 10 ஆண்டுகால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வைத்து வழிபட்டார். பின்னர் அவற்றை கழுகுமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, துரைச்சாமிபுரம், சி.ஆர்.காலனி, கரடிகுளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக சார்பில்வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.