தமிழகம்

தீவாக மாறிய ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு: 3 நாட்களாக தண்ணீர் வடியாததால் மக்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. 3 நாட்களாக தண்ணீர் வடியாததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆவடி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் தற்போது ஆறாயிரம் வீடுகள் உள்ளன. இதில், 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆவடியின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்த ஏரியை தூர்த்து இந்தக் குடியிருப்பை அரசு ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த கனமழைக்கு இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:

ஆவடியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், ஒவ்வொரு முறையும் கனமழைக்கு குடியி ருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் எங்கள் குடியிருப்பு வழியாக செல்கிறது. இக்கால்வாய் சிறிதாக உள்ளதால் அதில் இருந்து தண்ணீர் வழிந்தோடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது.

மாவட்ட ஆட்சியர் இருதினங்களுக்கு முன்பு வந்து எங்கள் பகுதியை பார்வை யிட்டுச் சென்றார். அப்போது இப்பிரச் சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், அதன் பிறகும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் யாரும் எங்கள் பகுதிக்கு இதுவரை வந்து பார்வையிடவில்லை.

குடியிருப்பை சுற்றி தண்ணீர் சூழ்ந் துள்ளது. அத்துடன், வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீருடன், கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

24 மணி நேரமும் கண்காணிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர் மழையால் மாவட்டத்தில் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள 649 ஏரிகளில் 85 ஏரிகளில் முழு கொள்ளளவும், 145 ஏரிகளில் பாதியளவு தண்ணீரும் 419 ஏரிகளில் பாதி அளவுக்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது. பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 787 ஏரிகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 17 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 38 சதவீதமும் புழல் ஏரியில் 16 சதவீதமும், சோழவரத்தில் 12 சதவீதமும் தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகள் அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT