வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

தேர்தல் செலவின உணவு பட்டியலில் பூரி விலையை குறைக்க வேண்டும்: வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ருசிகர கோரிக்கை

செய்திப்பிரிவு

தேர்தல் செலவின பட்டியலில் பூரி உள்ளிட்ட உணவுகளின் விலைப் பட்டியல் அதிகமாக இருப்பதால் குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பேசும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் நட்சத்திர பேச்சாளர்கள் வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தாலோ, பிரச்சார மேடையில் வேட்பாளரின் பெயர் இருந்தாலோ அல்லது அருகில் நின்றாலோ அந்த பிரச்சாரத்துக்கான மொத்த செலவும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். வருமான வரித்துறை அதிகாரிகள் பண்ணை வீடுகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள்.

ஏப்ரல் 4-ம் தேதி வரை முன் அனுமதி இல்லாமல் நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கலாம். ஆனால், ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதியன்று விளம்பரம் கொடுக்க முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு காசோலை அல்லது வரைவோலையாக மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத் துக்கான இடங்களை அரசியல் கட்சியினரும் தேர்வு செய்து முன் அனுமதி கோரலாம்’’ என தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டு அறை

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம். தொடர்பு எண் விவரம்: 94987-47537 அல்லது 0416-2256618 அல்லது கட்டணம் இல்லாத 18004253692 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

காட்பாடி தொகுதிக்கு 83000-30532 அல்லது 0416-2297647, வேலூர் தொகுதிக்கு 94987-47522 அல்லது 0416-2220519, அணைக்கட்டு தொகுதிக்கு 95144-01332 அல்லது 0416-2276443, கே.வி.குப்பம் தொகுதிக்கு 96558-36966 அல்லது 04171-246077, குடியாத்தம் தனி தொகுதிக்கு 83000-30536 அல்லது 04171-233500 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் வேலூர் மாவட் டத்தில் தேர்தல் செலவினங்கள் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்படும் பொருட்கள், உணவுகளுக்கான விலை பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசும்போது, ‘‘மைக் செட், ஆம்ளிபயர், ஸ்பீக்கர் உள்ளிட் டவற்றின் வாடகை அதிகமாக உள்ளது. நீங்கள் கொடுத்துள்ள வாடகை பட்டியலை வைத்து இரண்டு நாளில் பிரச்சாரம் செய்தாலே தேர்தல் ஆணையம் கூறியுள்ள செலவுத் தொகை வந்துவிடும்’’ என்றனர்.

இதற்கு ஆட்சியர் கூறும்போது, ‘‘இது தற்போது வெளியான வாடகை பட்டியல்தான். வாடகையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து ‘‘நகரத்தில் பூரி செட் விலை ரூ.45, கிராமங்களில் ரூ.35 என விலை இருக்கிறது.

இது ரொம்ப அதிகமாக உள்ளது. மற்ற உணவுகளின் விலையையும் குறைக்க வேண்டும்’’ என்று அரசியல் கட்சி பிரமுகர் தெரிவித்தபோது, அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து, ‘‘விலைப் பட்டியல் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT