தமிழகம்

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் துப்பாக்கி வெடித்து சுவர் சேதம்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனூர் பகுதியில் நேற்று முன்தினம் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

அப்போது, காவல் துறையினர் தங்களுடைய துப்பாக்கிகளுடன் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அணிவகுப்பு முடிந்த பிறகு காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஆம்பூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனி என்பவர் தன்னுடைய 9 எம்எம் கைத்துப்பாக்கியை கொடி அணிவகுப்புக்கு பிறகு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் எழுத்தர் சேதுவிடம் ஒப்படைத்துள்ளார்.

அவரும், அதை பெற்றுக் கொண்டு அதை சரிபார்த்தபோது தவறுதலாக டிரிகரில் கைப்பட்டு அழுத்தியதால் துப்பாக்கி வெடித்து ஒரு குண்டு வெளியேறி பக்கவாட்டின் சுவரில் பட்டு சுவர் சேதமடைந்துள்ளது.

கைத்துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்ட உடன் காவலர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பார்த்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என அறிந்தவுடன் நிம்மதி அடைந்தனர்.

மேலும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் காவல் நிலையம் அருகே துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அங்கு கூடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டு காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து உரிய விசாரணைக்கு பிறகு இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT